சீனாவுடனான எல்லை மோதலை தொடர்ந்து 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் பலரிடம் மிகவும் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியும் ஒன்று. நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக சீன ஆப்கள் தடை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று டிக்டாக் செயலி கூகிள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்டவற்றிலிருந்து நீக்கப்பட்டது.
இதனால் டிக்டாக் வீடியோ பார்ப்பவர்கள் ரோப்போசோ, சிங்காரி உள்ளிட்ட இந்திய செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் டிக்டாக் பிரபலங்களும் டிக்டாக்கிற்கு இணையான வேறு ஆப்களின் பக்கம் படையெடுக்க தொடங்கியுள்ளனர். டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பல மாதங்களாக இருந்து வந்த நிலையில் சிங்காரி என்ற இந்திய செயலி ஒன்று வெளியானது, ஆனால் டிக்டாக் மோகத்தால் அது அதிகமாக கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தற்போது டிக்டாக்கிற்கு இணையான வீடியோ செய்யும் வசதிகள் சிங்காரியில் இருப்பதால் பிரபலங்கள் பலர் சிங்காரி செயலிக்கு மாற தொடங்கியுள்ளனர். இதனால் ப்ளே ஸ்டோரில் இதன் தரவிறக்க எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கடந்த இரண்டு நாட்களில் ரோப்போசோ செயலியும் அதிக பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.