கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உள்ளது உலிகி கிராமம். அந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் சில மாதங்கள் முன்னதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தையை மடியில் கட்டிக்கொண்டு அவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
சமீபமாக அந்த குழந்தை அவரிடம் இல்லை. இதை பார்த்த அப்பகுதி அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் அந்த பெண்ணை விசாரித்தபோது குழந்தையை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக குழந்தையை வாங்கியவர்களை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தை மேம்பாட்டு துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பிச்சை எடுத்து வந்த பெண்ணை விசாரித்தபோது அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவும், கொஞ்சம் மனநலம் சரியில்லாதவராகவும் இருந்துள்ளார். குடிக்க பணம் இல்லாததால் ரூ100க்கு அந்த குழந்தையை விற்றுள்ளார். அந்த பெண் இதே போல வேறு குழந்தையையும் விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.