தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..! 7 பச்சிளம் குழந்தைகள் பலி..!!

Senthil Velan

ஞாயிறு, 26 மே 2024 (10:14 IST)
டெல்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் சிக்கிய நிலையில், அதில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 
 
தகவல் அறிந்து 16  வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் மருத்துவமனை மற்றும் அதன்  அருகில் இருந்த குடியிருப்பு கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 
 
தீ விபத்தில் காயத்துடன் உயிருக்கு போராடி வரும் பச்சிளம் குழந்தைகள் கிழக்கு டெல்லியில் உள்ள அட்வான்ஸ் என்.ஐ.சி.யூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை:
 
தீ விபத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  
 
இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம் என்றும் காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ: வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்