ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

Siva

ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:37 IST)
தெலங்கானா அரசு, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் வரையிலும், வாரத்திற்கு 48 மணிநேரம் வரையிலும் வேலை செய்ய அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியான உத்தரவில், தினசரி வேலை நேரம் 10 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும், வாராந்திர வரம்பு 48 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகளுக்கு மேல் செய்யப்படும் வேலைக்கு ஓவர் டைம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
 
மேலும், ஒரு நாளைக்கு ஆறு மணிநேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிட இடைவெளி வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் மொத்த வேலை மற்றும் ஓய்வு நேரம் 24 மணிநேரத்தில் 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
 
ஊழியர்கள் வாரத்திற்கு வழக்கமான 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யலாம், ஆனால் ஒரு காலாண்டில் அதிகபட்சமாக 144 மணிநேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய முடியும். கூடுதல் நேரம் வேலை செய்ததற்கு அவர்களுக்கு ஓவர் டைம் ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்