கேரளாவின் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் இம்தியாஸ் அகமது என்ற வழக்கறிஞரின் வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார் சேலத்தைச் சேர்ந்த 55 வயது பெண். அவர் நவம்பர் 28 ஆம் தேதி அங்கு வேலைக்கு சேர்ந்த நிலையில், வீட்டு வேலைகள் கடுமையாக இருப்பதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும் கணவருக்கு தகவல் சொல்லியுள்ளார். அதனால் அவரை திரும்பி வர சொல்லியுள்ளார் கணவர். ஆனால் இம்தியாஸ் அகமது அவரை செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி அந்த பெண்ணின் கணவருக்கு மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தொலைபேசியில் செய்தி கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கண்பார்வையற்ற கணவரும் அவரது குழந்தைகளும் கேரளாவுக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சில் நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் வழக்கறிஞர் இம்தியாஸ் அகமது மேல் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் புடவைகளை இணைத்து பால்கனி வழியாக இறங்க முயன்ற போது தவறி விழுந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.