கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: தண்ணீர் திறக்க மீண்டும் உத்தரவு!
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (15:52 IST)
காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
இந்த விசாரணையின் போது கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. தமிழகத்திற்கு 6000 கன அடி வீதம் மூன்று நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் 2 நாட்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறினார்.
இரு மாநில அரசுகளையும் அழைத்து பேசி காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது எனவும் அவர்கள் கூறினர். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக அரசின் மனுக்களை விசாரணைக்கு எடுக்க கூடாது என தமிழக அரசு தெரிவித்தது.