டெல்லி தான் எல்லாத்துக்கும் காரணம்.! மக்களவையில் காரசார விவாதம்.!

Senthil Velan

திங்கள், 29 ஜூலை 2024 (15:06 IST)
தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்து மூன்று மாணவர்கள் பலியான விவகாரத்தில்,  டெல்லி அரசின் அலட்சியம் தான் காரணம் என்று பாஜக பெண் எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். 
 
டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால்,  ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.   இரு பெண்கள் உட்பட மூன்று மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர்.
 
இந்நிலையில் மூன்று மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் காரசார விவாதம் நடந்தது.  அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், இந்த சம்பவம் பெரும் வேதனை அளிக்கிறது என்றும்  இதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், உத்திரபிரதேசத்தில்  சட்டவிரோத கட்டடங்கள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படுகின்றன என்றும் அதேபோல், டில்லியில் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் 
 
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர்,  யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன என்று தெரிவித்தார். மாணவர்களின் உயிரிழப்புக்கு எந்த இழப்பீடும் போதுமானதாக இருக்காது என்றும் மாநகராட்சிக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய பாஜக பெண் எம்பி பன்சூரி ஸ்வராஜ், உயிரிழந்த 3 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு டெல்லியில் தங்கி இருந்து பயிற்சி எடுத்து வந்துள்ளனர் என்றும் இந்த மாணவர்களின் உயிரிழப்பிற்கு, டெல்லி அரசின் அலட்சியம் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.  ஒரு தசாப்த காலமாக, ஆம் ஆத்மி கட்சி டில்லியில் அதிகாரத்தை அனுபவித்து வருகிறது என்று அவர் கூறினார்.

ALSO READ: சட்டசபையில் குட்கா கொண்டு சென்ற வழக்கு.! இந்த தேதியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

டெல்லி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்தார். மாணவர்கள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம்  குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்