தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், குல்சார்லா கிராமத்தில் கணவன் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மைத்துனி ஆகியோரை அரிவாளால் வெட்டி கொன்ற பின்னர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாதையா என்ற அந்த நபர், தனது குடும்ப உறுப்பினர்களை கொன்ற பிறகு, தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
யாதையாவின் மனைவி, ஒரு மகள் மற்றும் மைத்துனி ஆகியோர் கொலையில் பலியாகியுள்ளனர். மற்றொரு மகள், இந்த தாக்குதலில் இருந்து தப்பித்து சென்று தற்போது பாதுகாப்பாக இருக்கிறார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
"யாதையா என்ற நபர் தனது மனைவி, மகள் மற்றும் மைத்துனியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். அதன் பிறகு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மற்றொரு மகளையும் கொல்ல முயன்றார், ஆனால் அவர் தப்பிவிட்டார். நாங்கள் வழக்கு பதிவு செய்து, உடற்கூறு ஆய்வுக்காக உடல்களை அனுப்பி வைத்துள்ளோம்," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.