ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நகரில் நேற்று இரவு ஒரு காரில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், இந்த குடும்பம் கடன் சுமையில் சிக்கி, விஷம் குடித்து கூட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் தாமில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க டேராடூனில் இருந்து வந்திருந்த ப்ரவீன் மித்தல் மற்றும் அவரது குடும்பத்தினர், நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.
பஞ்ச்குலா போலீசாரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மரணமடைந்தவர்கள் ப்ரவீன் மித்தல் (42), அவரது பெற்றோர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரங்கள் வெளியாகவில்லை.