கோவிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதாக கூறி கோவில் அர்ச்சகர் கோவிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அகமதாபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள குபேர்நகரை சேர்ந்தவர் மகேந்திர மினேகர். இவருக்கு சொந்தமான சிறு கோவில் ஒன்று அந்த பகுதியில் இருந்து வருகிறது. அந்த கோவில் அவர்களுடைய மூதாதையர்கள் கட்டியது என்பதால் மகேந்திர மினேகரே அதன் அர்ச்சகராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மகேந்திர மினேகர் கோவில் வளாகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவரது மகன் ப்ரிஜேஷ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இறக்கும் முன்பு தனது தந்தை மகேந்திர மினேகர் தனக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறியுள்ள அவர், கோவிலை இடிக்க மாநகராட்சி முயற்சிப்பதாகவும், எப்படியாவது கோவிலை காப்பாற்றும்படியும் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கோவிலை இடிக்கும் எந்த திட்டமும் தங்களுக்கு இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K