இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இன்று முதல் கோயில்களை திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும் கோயில்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக்கூடாது, புனித நூல்களுக்கு அனுமதி கிடையாது. வழிபாட்டு தலங்களுக்குள் செல்வதற்கு முன் சானிடைசர் கொண்டு கைகளை கழுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார், ஆல்கஹால் கலந்த சானிட்டைசர்களை பயன்படுத்தியவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். இது சம்மந்தமாக ‘எப்படி ஆல்கஹால் அருந்தியவர்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்க முடியாதோ, அதுபோல ஆல்கஹால் கொண்ட சானிட்டைசர்களைப் பயன்படுத்தியவர்களையும் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் கோயிலுக்கு வெளியே சோப்புகளை கொண்டு கைகழுவி சுத்தமாக வர சொல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.