கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜகவின் சதீஷ், அவரது சகோதர் நவீன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட இருந்ததாக மூன்று பேரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் தொடர்பாக பாஜகவின் நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கேசவ விநாயகத்தின் செல்போன் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கவும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தங்களது அனுமதியுடனே கேசவ விநாயகத்தை விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி போலீசார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? என்றும் 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போய் உள்ளது என்றும் அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது என்றும் கபில் சிபில் முறையிட்டார்.