ரூ. 100 கோடி மதிப்புள்ள ஹெராயின் - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல்

வியாழன், 14 ஜூலை 2016 (18:01 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 

 
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
அப்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய நார்லி கிராமத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் தப்பியோட முயன்றதுடன், வீரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
இதனைத் தொடர்ந்து, வீரர்களும் திருப்பி சுட்டனர். இச்சம்பவத்தில் 2 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 21 கிலோ கிராம் எடைகொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடி என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்