ரயில் நிலைய மேம்பாட்டு வசூல்; உயரும் ரயில் டிக்கெட் கட்டணம்!

திங்கள், 10 ஜனவரி 2022 (09:00 IST)
இந்தியாவில் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளிடம் மேம்பாட்டு நிதி வசூல் செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பிரதான ரயில் நிலையங்கள் தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக பயணிப்போரிடம் மேம்பாட்டு நிதியை டிக்கெட் கட்டணத்துடன் வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான மேம்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணிப்போருக்கு டிக்கெட் கட்டணத்துடன் ரூ.50 மேம்பாட்டு நிதியாக வசூல் செய்யப்படும். ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.25 கட்டணமாகவும், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.10 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை தொடங்குபவர்களுக்கான கட்டணம்.

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் வந்து இறங்குவோருக்கு இதில் பாதி கட்டணமும், புறப்படுவது, இறங்குவது இரண்டுமே மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களாக இருக்கும்பட்சத்தில் 1.5 மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்