கொரோனா காலத்திலும் ஓசி ரயில் பயணம்? 27 லட்சம் பேரிடம் ரூ.144 கோடி அபராதம்!

திங்கள், 7 ஜூன் 2021 (08:29 IST)
கடந்த நிதியாண்டில் ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக சுமார் 27 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக கொரோனா பரவல் காரணமாக முழு முடக்கம் அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மே மாதம் முதலாக சிறப்பு ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் முன்பதிவற்ற இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த நிதியாண்டில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே துறை கடந்த 2020-21 நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றது, போலி டிக்கெட்டுகளை காட்டியது தொடர்பான புகார்களில் 27,50,000 பேர் பிடிபட்ட நிலையில் அவர்களிடம் அபராதமாக ரூ.143,82,00,000 வசூலிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் இவ்வளவு பேர் பிடிபட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்