காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் இந்த விஷயத்தை இரு நாட்டு விவகாரமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரின் நிலவரத்தை அறியச் சென்ற ங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரும் அனுமதிக்கப்படவில்லை. காஷ்மீர் ஆளுநர் ராகுலுக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் காஷ்மீரைப் பார்த்துவிட்டு பிறகு பேசவேண்டும் எனவும் கூறினார். ஆனால் அதற்கு ராகுல் சம்மதம் தெரிவிக்கவே தனது அழைப்பைத் திரும்ப பெற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதா தளம் மனோஜ் ஜா ஆகியோர் அடங்கிய எதிர்க்கட்சிகள் குழு இன்று காலை 11.30 மணிக்கு காஷ்மீருக்கு விமானத்தில் செல்ல இருக்கிறது. ஆனால் இதற்கும் காஷ்மீர் மாநில நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து ‘ மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இப்போது தலைவர்கள் வந்தால் அது மக்களைப் பாதிக்கும். காஷ்மீருக்கு வருவது இங்கு பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவதுபோல ஆகும். எனவே காஷ்மீருக்கு வரவேண்டாம்’ எனக் கூறியுள்ளது. இதனால் தலைவர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.