பிரதமர் கண்களில் பயத்தை பார்த்தேன்!; ப்ரஸ் மீட் வைத்த ராகுல் காந்தி!

ஞாயிறு, 26 மார்ச் 2023 (08:57 IST)
மோடி சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான காரணம் குறித்து ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்.பியாகவும் இருந்த ராகுல்காந்தி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியபோது பிரதமர் நரேந்திரமோடி குறித்தும் மோடி சமூகம் குறித்தும் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. அதில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பேசிய ராகுல்காந்தி “அதானி விவகாரத்தில் எனது பேச்சால் பிரதமர் மோடி பயந்து போனதால் எனது எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பீதியடைந்த மத்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக இந்த நாடகத்தை நடத்தியுள்ளது.

அதானி விவகாரம் குறித்து நான் பேசி விடுவேனோ என பிரதமர் மோடி பயந்தார். இதற்கு முன்பும் அவரது கண்களில் பயத்தை பார்த்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் இருந்து என்னை நிரந்தர தகுதி நீக்கம் செய்தாலும், என்னை சிறையில் தள்ளினாலும் அது என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நான் தொடர்ந்து முன்னோக்கி நடைபோடுவேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்