சிறையிலிருந்து முதல்வருக்கு பேஸ்புக் வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த கைதி
வியாழன், 31 மே 2018 (18:51 IST)
பஞ்சாப் மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் முதல்வரை கொல்லப் போவதாக மிரட்டல் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்ரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். ஃப்ரீத்கோட் சிறையில் உள்ள கைதி கோபிந்த் சிங் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து பேஸ்புக்கில் முதல்வரை கொல்லப் போவதாக மிரட்டை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்துக்கு பின்னரே காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்,
முதல்வர் அம்ரீந்தர் சிங் ஊழலையும், போதைப் பொருள் கடத்தலையும் ஒழிப்பேன் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யான வாக்குறுதி அளித்த அம்ரீந்தர் சிங்கின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோபிந்த் சிங்கின் அறையில் சோதனை செய்து அங்கிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் இருக்கும் கைதி ஒருவர் மொபைல் பயன்படுத்தி பேஸ்புக் மூலம் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.