குடிக்க தண்ணீர் கிடைப்பதே போராட்டமாக மாறும் ஆபத்து? – குடியரசு தலைவர் எச்சரிக்கை!

புதன், 2 நவம்பர் 2022 (08:46 IST)
நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டுமென உலக விஞ்ஞானிகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் மூன்று பங்கு கடலாலும், ஒரு பங்கு நிலபரப்பாலும் சூழப்பட்டுள்ளது. இந்த ஒரு பங்கு நிலப்பரப்பில் நன்னீர் ஆதாரமாக மழை மற்றும் நிலத்தடி நீர் மட்டுமே உள்ளன. பெருகி வரும் மக்கள் தொகையும், நன்னீர் ஆதாரங்கள் அழிவதும் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் நொய்டாவில் நடந்த 7வது இந்திய தண்ணீர் வார விழாவில் பேசிய இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு “நல்ல தண்ணீர் என்பது வரம்புக்கு உட்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். முறையான பயன்பாடு மற்றும் மறுசுழற்சி மூலமாக மட்டுமே நன்னீரை தக்க வைக்க முடியும். தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு அவர்கள் அனைவருக்கும் குடி தண்ணீர் வழங்குவது ஒவ்வொரு நாட்டு அரசுக்கும் சாவாலாக மாற தொடங்கியுள்ளது.



தண்ணீர் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. ஆனால் தற்போது நன்னீர் ஆதாரங்களான ஆறுகள், அணைகள், குளம் மற்றும் ஏரிகள் பல அழிவை சந்தித்து வருகின்றன. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் தண்ணீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நமது நாட்டில் 80 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்குதான் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கை முறையில் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர் பாதுகாப்பிற்கான கண்டுபிடிப்புகளில் உலக விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்