காடுகளின் பரப்பளவு ஒரு விழுக்காடு அதிகரிப்பு:பிரகாஷ் ஜவடேகர்

சனி, 22 ஜூன் 2019 (12:14 IST)
இந்தியாவில் காடுகளின் பரப்பளவு ஒரு விழுக்காடு அதிகரித்திருப்பதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் காடுகளின் பரபரப்பளவு குறைந்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவந்தனர். இதை தொடர்ந்து காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று பல இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் காடுகளின் பரப்பளவு ஒரு விழுக்காடு அதிகரித்து இருப்பது, செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று மக்களைவையில் தெரிவித்தார்.

பின்பு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, செயற்கை கோள் புகைப்படங்கள் கரும்பு சாகுபடியையும் சேர்த்து கணக்கில் கொண்டிருக்ககூடும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மேனகா காந்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரகாஷ் ஜவடேக்கர், கடந்த ஆண்டில் ஒரு மரம் வெட்டும் இடத்தில், மூன்று மரக்கன்றுகள் நட அறிவுறுத்தப்பட்டதாகவும், செயற்கை கோள் புகைப்படங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்போது 24.39 விழுக்காடு பசுமையாக உள்ளது எனவும், நெடுஞ்சாலைகளில் 125 கோடி மரங்கள் நடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 2014 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்