நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் பாஜக ஜே.டி.எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் பாஜக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
சில பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த 23ம் தேதி சமூக வலைதளங்களில் பரவின. இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த விவகாரம் வெளிவந்த உடனே பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி சென்று விட்டார்.
இதை அடுத்து பிரஜ்வல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில், சில பெண்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலை கைது செய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.