ராமரை விமர்சித்த விவகாரத்தில் மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது

ஞாயிறு, 26 ஜூன் 2016 (03:16 IST)
ராமரை விமர்சித்த மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகேஷ் சந்திர குரு கைது செய்யப்பட்டு, மைசூரு பல்கலைக்கழகத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 

 
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதியிருக்கிறார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்துள்ளார். 
 
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மைசூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையை குற்றவாளிபோல‌ நடத்தினார். ஆனால் ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன என பேசினார். இதற்கு சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
 
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவின் (வன்முறையை தூண்டும் பேச்சு) கீழ் மகேஷ் சந்திர குரு மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதே போல் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பேராசிரியர் கே.எஸ்.பகவானுடன் இணைந்து பகவத் கீதையை எரிக்க முயற்சித்த விவகாரத்திலும் மகேஷ் சந்திர குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இவ்விரண்டு வழக்குகளையும் விசாரித்த மைசூரு நீதிமன்றம், வரும் ஜூலை 5-ம் தேதி வரை மகேஷ் சந்திர குருவை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி காவல் துறையினர் அவரை கைது செய்து நேற்று முன் தினம் மைசூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 
பேராசிரியர் மகேஷ் சந்திர குரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்