”ஜெய் ஸ்ரீராம்” கூற மறுத்த இளைஞர்களை தாக்கிய மத கும்பல்: சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்

சனி, 3 ஆகஸ்ட் 2019 (11:48 IST)
குஜராத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த இளைஞர்களை ஒரு மத கும்பல் தாக்கியுள்ளது.

இந்தியாவில் சில வருடங்களாகவே ஹிந்து அமைப்புகளைச் சேந்த மத கும்பல்களால் சிறுபான்மையினர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களை “ஜெய் ஸ்ரீராம்” என வற்புறுத்தி கூறவைப்பது போன்ற சம்பவங்கள் நடந்துவருகின்றன.

இந்நிலையில் குஜராத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்ததால் ஹிந்து மத கும்பல் ஒன்று அவர்களை தாக்கியுள்ளது.  

கடந்த வியாழக்கிழமை குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த இளைஞர்களான சமீர், சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் மோட்டார் பைக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு, தங்களது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 6 பேர், அவர்களை நிறுத்தி, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடும்படி கூறியுள்ளனர்.

அதற்கு இஸ்லாமிய இளைஞர்கள் மறுத்துள்ளனர். இதனால் அவர்களை பைக் செயினாலும், பயங்ரமான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதன் பிறகு படுகாயம் அடைந்த அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கோத்ரா போலீஸார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்