மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு மினி பேருந்து டிரைவர் தனது சம்பளம் குறைக்கப்பட்ட அதிருப்தியில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், பேருந்தில் இருந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவை சேர்ந்த ஜனார்த்தன் என்பவர், ஒரு மினி பேருந்தை ஓட்டி வந்தார். சமீபத்தில், அவரது சம்பளம் திடீரென குறைக்கப்பட்டதாகவும் இதனால் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது. பேருந்து நிர்வாகத்தின் மீது வெறுப்புடன் இருந்த அவர், ஓட்டிக் கொண்டிருந்த பேருந்தில் ஆத்திரத்தில் தீ வைத்தார்.
தீ வைத்து விட்டதும், அவர் ஓடும் பேருந்திலிருந்து குதித்து விட்டார். அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து வெளியேற முயன்றனர். ஆனால், பேருந்தின் கதவு சரியாக திறக்காததால், அதில் சிக்கிய நான்கு ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பயணிகள் தீக்காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பேருந்து டிரைவர் கீழே குதித்ததால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்பு, அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.