ஆதரவுதானே தந்துட்டா போச்சு..! – மேகாலயாவில் என்.பி.பி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு!

வெள்ளி, 3 மார்ச் 2023 (08:53 IST)
மேகாலயாவில் ஆளும் என்.பி.பி கட்சிக்கு பெரும்பான்மை குறைவாக உள்ள நிலையில் பாஜக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மறைவினால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீத 59 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆளும் என்.பி.பி கட்சியும், பாஜக கட்சியும் இந்த முறை தனித்தே போட்டியிட்டன. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் என்.பி.பி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு 30 இடங்கள் தேவை என்ற நிலையில் என்.பி.பி சிக்கலுக்கு உள்ளானது.

பாஜக 3 இடங்களில் வென்றிருந்த நிலையில் ஆளும் என்.பி.பி கட்சியின் முதல்வர் கான்ராட் சர்மா பாஜக ஆதரவை கோரினார். இந்நிலையில் என்.பி.பி கட்சிக்கு ஆதரவு தருவதாக மேகாலயா பாஜக தலைவர் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் 2 சுயேட்சை வேட்பாளர்களும் என்.பி.பிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் மேகாலயாவில் என்.பி.பி கட்சியின் தொங்கு ஆட்சி அமைய உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்