மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மன்மோகன் சிங் நாளை பதிவி விலகுகிறார்
வெள்ளி, 16 மே 2014 (16:00 IST)
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிட்டவிட்ட நிலையில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நாளை தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். வரும் 21 ஆம் தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 330 க்கும் மேற்பட்ட இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாட்டின் பிரதமராக பதவி ஏற்கயிருக்கும் நரேந்திர மோடிக்கு தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கும் மன்மோகன் சிங், அதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.