லாட்ஜில் தங்கும் பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பிய நபர்

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:19 IST)
லாட்ஜில் தங்கும் பெண்களை, அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பி வந்த நபரை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு  சமீபத்தில் வாட்ஸ் அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அதில் ஒரு பெண் லாட்ஜில் உள்ள ஒரு அறையில், குளித்து முடித்து விட்டு வந்து உடை மாற்றும் காட்சிகள் இருந்தன.
 
அதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அந்த பெண் அவரின் உறவினர் ஆவார். இதனால், அவர் உடனடியாக அந்த பெண்ணின் கணவருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.

அந்த வீடியோவை பார்த்த அப்பெண்ணின் கணவர், சமீபத்தில் அவரும், அவரது மனைவியும் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த போதுதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டார்.
 
இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவில் சிறிய அளவில் ஒரு ஓட்டை போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, பக்கத்து அறையில் தங்கியிருந்த ரமேஷ்(46) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அந்த லாட்ஜில் தங்கியிருந்து கேரளா சென்று பூஜை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்பவர் என்பது தெரிய வந்தது. 
 
அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர்தான் தனது அறையில் இருந்தவாறு, பக்கத்து அறையில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்