மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த 84 வயதான அசோக் மஜும்தார், தான் இறந்த பிறகு தன் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்ய போவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, அந்த உறுதிமொழியை தனது முதுகில் நிரந்தரமாக பச்சை குத்திக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உடல்நலக்குறைவால் ஜெய் ஆரோக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசோக் மஜும்தாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவரது முதுகில் ஒரு பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தப் பச்சையில், “மருத்துவக் கல்லூரியின் சொத்து” என்றும், அதன் கீழ் உறுதிமொழி அளித்த தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவலை மருத்துவமனை மருத்துவர்கள், கஜரா ராஜா மருத்துவக் கல்லூரி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் ஆர்.கே.எஸ். தாகட், மஜும்தாரை தொடர்புகொண்டு, அவரது உறுதிமொழிக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், மஜும்தாரின் உறுதிமொழியை அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மஜும்தார் தனது உறுதிமொழி குறித்துக் கூறுகையில், "நான் இறந்த பிறகு எனது விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அது எனது குடும்பத்தினருக்கு நிரந்தரமான நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இதை செய்தேன்" என்று தெரிவித்தார்.