கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர்களுக்கு தாய் மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று கல்வியாளர்கள் அரசிடம் தெரிவித்த புகாரின் எதிரொலியாக வரும் கல்வியாண்டு முதல்அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மலையாள பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மலையாளம் கற்று கொடுக்க வேண்டும். தாய் மொழியான மலையாளம் கற்பதை அனைவரும் விரும்ப வேண்டும்.
கேரளாவில் உள்ள ஆங்கில வழி பள்ளிக்கூடங்களிலும் கட்டாயம் மொழி பாடமாக மலையாளம் இடம் பெற வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரிவர மலையாளம் தெரிவதில்லை. இந்தி கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வம் மலையாளம் கற்பதில் இல்லை. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.