வாரணாசி தொகுதியில் மோடியை தோற்கடிப்பதே என் லட்சியம் - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

வியாழன், 3 ஏப்ரல் 2014 (11:39 IST)
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Narendra Modi vs Arvind Kejriwal
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
 
கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று 3-வது நாளாக தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளை அவர் கடுமையாக தாக்கினார். நரேந்திர மோடியை தோற்கடிப்பதே தனது லட்சியம் என்றும் ஆவேசமாக கூறினார்.

டெல்லியில் ஆட்சி நடத்த முடியாமல் நான் ஓடிவிட்டதாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். நான் ஒன்றும் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவில்லை. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கும் தைரியம் வேண்டும். நான் மக்களுடன் இருந்து கொண்டு அவர்களுக்கு (காங்கிரஸ், பாரதீய ஜனதா) தொடர்ந்து தொல்லை கொடுப்பேன். அவர்கள்தான் ஆட்சி அமைக்க முன்வராமல் ஓடினார்கள்.
 
மக்களின் ஆதரவு தனக்கு இருந்த போதிலும், தனது தாயாரின் கட்டளையை ஏற்றுதான் ராமபிரான் வனவாசம் சென்றார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை ஊழலை எதிர்த்து போராடுவேன்.
 
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதே எனது லட்சியம். இதற்காகவே அங்கு நான் போட்டியிடுகிறேன். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஆம் ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் தோற்கடிப்பார். நாங்கள் நினைத்து இருந்தால் பாராளுமன்றத்துக்கு செல்வதற்காக பாதுகாப்பான தொகுதிகளை தேர்ந்து எடுத்திருக்க முடியும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்