மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் எல்.கே. அத்வானி

வியாழன், 18 செப்டம்பர் 2014 (08:12 IST)
மக்களவைக்கான நெறிமுறைகள் குழுவின் புதிய தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நியமிக்கப்பட்டார்.

கடந்த மக்களவையில், நெறிமுறைகள் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் கவிட் இருந்தார். தற்போது புதிய மக்களவை அமைந்துள்ளதையடுத்து, அந்தக் குழுவின் தலைவராக எல்.கே. அத்வானியை மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் நியமனம் செய்துள்ளார்.

ஷேர் சிங் குபாயா, ஹேமந்த் துக்காராம் கோட்ஸ், பிரகலாத் ஜோஷி, ஏ.அருண்மொழித் தேவன், நினோங் எரிங், பகத்சிங் கோஷியாரி, அர்ஜுன் ராம் மேக்வால், பர்த்ருஹரி மஹதப், கரியா முண்டா, ஜெய்ஸ்ரீபென் படேல், மல்லா ரெட்டி, சுமேதானந்த் சரஸ்வதி, போலா சிங் ஆகியோர் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளர்.

இந்நிலையில், பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவுக்கு பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் பி.சி. கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவையில் நெறிமுறைகளுக்கு எதிராக எம்.பி.க்கள் பேசுவது, அவர்களது நடத்தை தொடர்பான புகார்கள் ஆகியவற்றை இந்தக் குழு விசாரிக்கும்.

மேலும், இதுதொடர்பான விவகாரங்களை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தும் அதிகாரமும், நெறிமுறைகள் குழுவுக்கு உண்டு.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், அதிக வயதைக் காரணமாகக் கூறி அத்வானிக்கு இடம் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்