தெலங்கானாவின் முதல் முதலமைச்சராகிறார் சந்திரசேகர ராவ்

சனி, 17 மே 2014 (14:13 IST)
தெலங்கானாவில் நடத்தப்பட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு சந்திரசேகர ராவ் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலுடன் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளில், 63 தொகுதிகளில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றுள்ளது.
 
காங்கிரஸ், 23 தொகுதிகளைப் பிடித்துள்ளது. தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி 21 தொகுதிகளையும், பிறகட்சிகள் 15 தொகுதிகளையும் பிடித்துள்ளன.
 
மேடக் மாவட்டத்தில் உள்ள கேஜ்வெல் தொகுதியில், சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றார். அவரது மகன் ராமராவ் சிர்சில்லாவிலும், மருமகன் ஹரீஷ் ராவ் சித்திப்பேட்டையிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
 
ஜூன், 2ஆம் தேதி அமைய உள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக, சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார். தெலங்கானா பகுதியில் போட்டியிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்