அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆங்கில பாப் பாடகிகளில் ஒருவர் கேட்டி பெர்ரி. சமீபத்தில் இந்தியா வந்த கேட்டி பெர்ரி மீண்டும் அமெரிக்கா செல்ல மும்பை சர்வதேச விமான நிலையம் சென்றுள்ளார். கேட்டி பெர்ரியை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க பின்னாலேயே சென்றுள்ளனர். கேட்டியுடன் வந்த பாதுகாவலர்கள் அவர்களை நெருங்க விடாமல் தடுத்தப்படி சென்றிருக்கிறார்கள்.
ஒரு ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த கேட்டி பெர்ரி பாதுகாப்பு நுழைவு வாயிலை தாண்டியுள்ளார். முழுக்க செக்யூரிட்டிகளோடு வந்தாலும் அவரை விமான நிலைய காவலர் தடுத்து பாஸ்போர்ட் கேட்டுள்ளார். ஆனால் அதை காட்டாமலே கேட்டி பெர்ரி காவலரை தாண்டி செல்ல, அவரது செக்யூரிட்டிகளும் பாஸ்போர்ட் காட்டாமலே தாண்டி செல்கின்றனர்.
ரசிகர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. கேட்டி பெர்ரியின் இந்த விதிகளை மீறிய செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் “நீங்கள் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் வேறொரு நாட்டிற்கு செல்லும்போது அங்குள்ள சட்டதிட்டங்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்” என கருத்து தெரிவித்துள்ளனர்.