கர்நாடக தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இன்று முதல் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. கர்நாடக தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் முக்கிய வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி இருந்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் முதல் பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவரது பெட்ஜெட் உரை பின்வருமாறு, விவசாயிகளுக்கு பயிர் கடன் ரூ.34,000 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம், விவசாயி ஒருவர் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் அவர்கள் தள்ளுபடிக்கு தகுதியுள்ளவர்களாவர்.
பயிர்க் கடன் தள்ளுபடியால், அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை ஈடுகட்ட, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.14 காசுகளும், டீசலுக்கு ரூ.1.12 காசுகளும் வரி உயர்த்தப்படும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மீதான கலால்வரி 4 சதவீதம் உயர்த்தப்படும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை பெற்றுள்ள விவாசயிகளின் கடன் இந்த அறிவிப்பு மூலம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த மாநில மக்கள் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை அளித்து ஆட்சியில் அமரவைக்கவிட்டாலும், கூட்டணி ஆட்சிக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மூலம் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய பணிகளை செய்வோம் என கூறினார்.