சசிகலாவிற்கு சிறப்பு சலுகை - சித்தராமய்யாவிற்கு தொடர்பா?
திங்கள், 24 ஜூலை 2017 (12:14 IST)
சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள விவகாரத்தில், கர்நாடக அரசுக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதேசமயம், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
அந்நிலையில், பாஜக-வை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையிலான அம்மாநில சட்டப்பேரவை பொது கணக்குக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரான டிஜிபி மேகரிக், டிஐஜி ரேவண்ணா ஆகியோர், சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கும் தொடர்பிருப்பதாக அம்மாநில பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவிற்கும், சசிகலாவிற்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.