காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி இஸ்ரேல் மீது கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"இஸ்ரேல் 400 குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவிகளை கொடூரமாக கொன்று குவித்துள்ளது. மனித நேயம் எனும் உணர்வு அவர்களுக்கில்லை. இதுபோன்ற தாக்குதல்கள், உண்மையை எதிர்கொள்ள முடியாத அவர்களின் இயலாமையையும் பலவீனத்தையும் காட்டுகிறது.
மேற்கத்திய நாடுகள் இதை ஆதரிக்கலாம், அல்லது பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலையில் தங்களின் ஒத்துழைப்பை மறுக்கலாம். ஆனால், மனச்சாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனும் உண்மையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இஸ்ரேல் அரசு மறந்து விடக்கூடாது. இஸ்ரேல் எந்த அளவிற்கு கொடூர செயல்களில் ஈடுபடுகிறதோ, அதே அளவுக்கு அவர்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மறுபுறம், பாலஸ்தீன மக்கள் துன்பங்களை தாங்கிக்கொண்டு கூட தங்கள் மனதை உறுதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் துணிச்சல், தமது உரிமைக்காக அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமும் அவர்களின் உள்முனைப்பை காட்டுகிறது," என பதிவிட்டுள்ளார்.