மருத்துவ கருவிகளுடன் துருக்கி புறப்பட்ட இந்திய மருத்துவ குழு!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:16 IST)
துருக்கியில் ஏற்பட்ட தொடர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ குழு துருக்கி புறப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து உருவான பூகம்பங்களால் கட்டிடங்கள் சுக்குநூறாக உடைந்தன. இந்த பேரிடர் சில மணி நேரங்களில் 4000 உயிர்களை பலி கொண்டது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து அவர்களை மீட்க மீட்பு படையை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பேரிடரிலிருந்து துருக்கியை மீட்க 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உத்தரபிரதேசம், காசியாபாத் விமானப்படை தளத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

துருக்கி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு துருக்கி புறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் பேரிடர் நிவாரணம் அளிக்க அரசு அறிவித்த சில மணிநேரங்களில், இந்திய இராணுவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குவதற்காக கள பணியாளர்களைத் திரட்டியுள்ளது.

ஆக்ராவைச் சேர்ந்த ராணுவக் கள மருத்துவமனை 99 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுவில் மற்ற பொது மருத்துவர்களை தவிர எலும்பியல் அறுவை சிகிச்சைக் குழு, பொது அறுவை சிகிச்சை நிபுணர் குழு, மருத்துவ நிபுணர் குழுக்கள் ஆகியவையும் அடங்கும். 30 படுக்கை வசதிகளுடன் எக்ஸ்ரே இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உருவாக்கும் எந்திரம், இதய கண்காணிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களுடன் இந்த மருத்துவ குழுவினர் துருக்கி புறப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்