பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்தியாவின் முப்படை ராணுவப் படைகள் இணைந்து "ஆபரேஷன் சிந்தூர்" என்ற தாக்குதலை நடத்தியன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் இலக்காகக் கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து, சிறிய அளவிலான போர் சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் 26 இடங்களை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளிக்க இந்திய ராணுவம் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 8ம் தேதி இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் இந்திய ராணுவம் மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் பதிலடி அளித்து வருகிறது என பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த தாக்குதல்களுக்கான வீடியோக்களை இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் மற்றும் அக்னூர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், அதற்கான சாட்சியங்கள் வீடியோக்களாக வெளிவந்துள்ளன.