பாகிஸ்தானுக்கு நதி நீர் கிடையாது – மத்திய அரசு அதிரடி முடிவு !

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (09:06 IST)
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளின் நீரை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் வேறு சில இடங்களிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதுபோல இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதையும் நிறுத்த யோசித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்த திட்டமிட்டு வருகிறது.
 

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி, சட்லஜ் மற்றும் பீஸ் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டி அந்த நீரை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உரி தாக்குதலின்போது 18 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்த போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இப்போது நடைமுறைப்படுத்தப் போவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்