ஐநாவின் அறிக்கையைக் குப்பையில் வீசுங்கள்’: சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்

வியாழன், 14 ஜூன் 2018 (23:53 IST)
காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை குப்பையில் வீசுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆவேசமாக கூறியுள்ளார். 
 
ஐநா மனித உரிமை அமைப்பு காஷ்மீர் குறித்து முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 49 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை அதன் தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், ஜூலை 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை வேண்டும் என்றும், காஷ்மீரில் பெலட் துப்பாக்கிகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த அறிக்கை குறித்து கருத்து கூறிய பாஜக மூத்த தலைவரும், பாஜக எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, 'ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையைக் குப்பைத்தொட்டியில் நான் வீசி எறியப்போகிறேன். ஒரு சார்பான அறிக்கையை அளிக்கும் இடதுசாரி சார்ந்த அமைப்பு. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களை நரகத்தில் தள்ள வேண்டும் என்றுதான் நான் கூற வேண்டும். காஷ்மீர் விவகாரம் பற்றி தெரியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதால், அவர்கள் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்று கூறினார். இந்த அறிக்கைக்கு மத்திய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்