அனைத்தும் உண்மையே; மன்னிப்பு கேட்க முடியாது - டிஐஜி ரூபா அதிரடி

வெள்ளி, 28 ஜூலை 2017 (10:23 IST)
சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில், தான் தனது கடமையே செய்ததாகவும், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் டிஐஜி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.      
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.  அதேசமயம், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு. மேலும் சிறைத்துறை அதிகாரிகள் சிலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறி தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, டிஜிபி சத்யநாராயணா ரூபாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ரூபா “ஒரு டிஐஜியாக நான் எனது கடமையைத்தான் செய்துள்ளேன். அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இது தொடர்பாக எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில், விசாரணையின் முடிவில்தான் உண்மைகள் வெளியே வரும்” என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்