ஆகஸ்டு மாதம் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியை Common DP ஆக வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் “மன் கீ பாத் (மனதின் குரல்)” நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.
அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் வெற்றியடைந்துள்ளதாக பேசினார். அதேசமயம் கொரோனா பாதிப்புகள் இன்னும் நீடித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் நாட்டின் 75வது சுதந்திர தினம் குறித்து பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 2 முதல் சுதந்திர தினமான ஆகஸ்டு 15 வரை நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைதள முகப்பு புகைப்படத்தில் சுதந்திர கொடியை Common DP ஆக வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதன்படி தற்போது தனது DP-ஐ மாற்றியுள்ள மோடி, இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, நமது மூவர்ண தேசிய கொடியை கொண்டாடும் இயக்கத்துக்கு நம் தேசம் தயாராகி வருகிறது. எனது சமூக வலைதள பக்கங்களில் காட்சி படத்தை (டி.பி.) மாற்றி மூவர்ண தேசிய கொடியை வைத்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதுபோலவே இன்று முதல் வருகிற 15 ஆ ம் தேதி வரை உங்களின் சமூக வலைதள பக்கங்களில் காட்சிப்படமாக மூவர்ண தேசிய கொடியை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் மிகவும் பெருமைபடக்கூடிய மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது முயற்சிகளுக்கு நமது தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். மூவர்ண கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு தேச முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என கூறினார்.