மருத்துவ மாணவி படுகொலை.. மம்தா பானர்ஜிக்கு ஹர்பஜன் சிங் எழுதிய கடிதம்..!

Mahendran

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (12:10 IST)
மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனையை தருகிறது. அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறை செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமின்றி,  சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம், பாதுகாப்பு மீதான கடுமையான தாக்குதல் ஆகும். நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு தான் இந்த சம்பவம்.

நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்தில் இது போன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு ஹர்பஜன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்