எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

Prasanth K

புதன், 6 ஆகஸ்ட் 2025 (11:08 IST)

ஜெயின் சமூகத்தினரின் கோவிலில் வளர்க்கப்பட்ட யானை ஆனந்த் அம்பானியின் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அதை திரும்ப பெறும் வரை ஓயமாட்டோம் என ஜெயின் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானி கடந்த 2024ம் ஆண்டு குஜராத் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் ‘வந்தாரா’ விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைத் தொடங்கினார். தற்போது இந்த மையத்தில் சிங்கங்கள், சிறுத்தைகள், முதலை, காண்டாமிருகம் என 43 வகையான விலங்கினங்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சமீபமாக ஆனந்த் அம்பானியின் இந்த உயிரியல் பூங்கா சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மகாராஷ்டிராவில் நந்தினி மடத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் கோவிலில் மகாதேவி என்ற யானை வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த யானை கோவிலில் வைத்து துன்புறுத்தப்படுவதாக பீட்டா அளித்த புகாரில், யானையை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால் மகாதேவி யானை அரசு நடத்தும் யானைகள் காப்பகங்களுக்கு அனுப்பப்படாமல் ஆனந்த அம்பானியின் வந்தாரா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்த வகையில் தனியார் பூங்காவிற்கு யானை அனுப்பப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ள ஜெயின் சமூகத்தினர், தங்கள் மகாதேவி யானையை தாங்கள் பாசத்தோடு வளர்த்து வந்ததாகவும், அதனை திரும்ப பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என கூறியுள்ளனர்.

 

மேலும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள விலங்குகளில் பல சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என ஜெர்மன் ஊடகமான Süddeutsche Zeitung செய்தி வெளியிட்டது. தென்னாப்பிரிக்க விலங்குகள் உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பும் இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி ஆப்பிரிக்க சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வந்தாரா உயிரியல் பூங்கா நிர்வாகம் மறுத்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்