இந்தியாவில் சாலை விபத்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளுக்கு சிவில் இன்ஜினியர்கள் மற்றும் ஆலோசகர்கள் அவர்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கைகளே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மேலும், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி "இந்தியாவில் சாலை விபத்து பிரச்சனை எதிர்கொள்வது பெரும் சிரமமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகளும், சுமார் 2 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் சிவில் இன்ஜினியர்களே. நான் எல்லோரையும் குறை கூறவில்லை, ஆனால் எனது 10 வருட அனுபவத்தில், கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கைகளை உருவாக்குபவர்களே தவறு செய்கிறனர்.