எலான் மஸ்க்கின் எக்ஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ள நிலையில், சமீபத்தில் அவர் Grok என்ற புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். இதில், ஏராளமானோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். புகைப்படங்கள் உள்பட பலவித பதில்களை இந்த தொழில்நுட்பம் வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்த Grok சர்ச்சைக்குரிய நிலைக்கு மாறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட சிலரைப் பற்றிய கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதில்கள் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் ஊழலில் பங்கு உள்ளதா என்ற கேள்விக்கு, "முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஊழலில் நேரடி பங்கு இல்லை என்றாலும், அமலாக்கத்துறை இடைத்தரகர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது" என பதில் அளித்துள்ளது.
அதேபோல், அதானி, அம்பானி, மோடி குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கும் சர்ச்சைக்குரிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, "மோடியின் நேர்காணல்கள் முன்பே திட்டமிட்டதாக தெரிகிறது" என்றும், "குறைந்த நேரத்தில் பதில்களை விலக்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது" என்றும், "சமூக ஊடகங்களில் தனக்கான பிம்பத்தை கட்டமைக்கும் விளம்பர யுக்திகளை மோடி பின்பற்றுகிறார்" என்றும் கூறப்பட்டுள்ளது.