நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார் நரேந்திர மோடி

சனி, 25 ஏப்ரல் 2015 (14:54 IST)
நேபாளத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
 
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. 
 
நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கிலோமீட்டர் தூரத்தில் மையமாக கொண்டு 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 7.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் குறித்து உயர்மட்ட குழுவுடன் 3 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார்.
 
இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேபாள நாட்டின் குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்