செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; விபத்தில் 32 பேர் பலி

செவ்வாய், 30 ஜனவரி 2018 (12:08 IST)
மேற்குவங்கத்தில் ஓட்டுனர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதால் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோரவிபத்தில் 32 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவல் கொடுக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டத்தை களைத்தனர். விசாரணையில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் போலீஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்