G Pay, PayTM-ல் பணம் அனுப்புறீங்களா..? அமலுக்கு வந்த புது ரூல்ஸ்! – முழு விவரங்கள் உள்ளே!
செவ்வாய், 2 ஜனவரி 2024 (11:26 IST)
இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்துகிறது.
இந்தியாவில் 2016ம் ஆண்டில் நடைபெற்ற பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இதற்காக கூகிள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற பல பரிவர்த்தனை செயலிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் இதை சரியாக கையாள தெரியாத நபர்களிடம் சில மோசடி கும்பல் எளிதில் பணத்தை திருடிவிடும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை ஒழுங்குப்படுத்த நேற்று முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அமல்படுத்தியது. அதன்படி,
ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள யுபிஐ ஐடிக்களை கூகிள் பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகள் நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக யுபிஐ பயன்படுத்தாமல் உள்ளவர்கள் மீண்டும் பயன்படுத்த புதிய யூபிஐ ஐடியை பெற வேண்டியதாக இருக்கும்.
பண மோசடிகளை தடுக்க ஒரு புதிய நபருக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேல் அனுப்பப்படும் முதல் பரிவர்த்தனைக்கு பணம் கிரெடிட் ஆக 4 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பணம் அனுப்பியவர் எப்போது வேண்டுமானாலும் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணம் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே எனப்படும் எளிய பரிமாற்ற வசதியும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ செயலிகள் மூலம் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தே ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.
மேலும், ப்ரீபெய்டு பேமண்ட் மெஷின் மூலம் ரூ.2 ஆயிரத்திற்கும் அதிகமாக செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளில் ஒரு பரிவர்த்தனைக்கு 1.1% என்ற அளவில் பரிமாற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.