வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்பன் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே சில வாரங்களுக்கு முன்பு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் பகுதி துல்லியமாக கணிக்கப்பட்டதால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உயிர்சேதம் பெரிதும் தவிர்க்கப்பட்டது. எனினும் வீடுகள், கடைகள், விமான நிலையம் உட்பட அனைத்து பகுதிகளும் புயலின் கோர தாண்டவத்தால் சேதமடைந்துள்ளன.
இந்த சேதங்களை சரிசெய்ய மத்திய அரசால் தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டனர். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வீரர்களில் 178 பேர் ஒடிசாவில் உள்ள கட்டாக் நகருக்கு திரும்பியுள்ளனர். அவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 49 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.